தீ / நெருப்பின் கண்டுபிடிப்பு:


வரலாற்றுக்கு முந்தைய பழங்காலத்திலேயே தீ அல்லது நெருப்பு மனிதரால் கண்டறியப் பட்டது எனலாம். பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கட்டைக் கரி (charcoal) மற்றும் எரிந்த எலும்புகள் ஆகியவை கற்களுக்கிடையே இருந்ததற்கான சான்றுகளைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.




தீயை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கண்டறிவதற்கு முன்னரே அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பழங்கால மனிதர் அறிந்திருந்தனர். எடுத்துக்காட்டாக, மின்னல் ஒரு மரத்தைத் தாக்கி அதனை எரிய வைப்பதைப் பார்த்த பழங்கால மனிதர்கள், தீயின் பயனை அறிந்ததோடு அதனை நடைமுறைப்படுத்தவும் முயன்றிருக்கலாம்.

குகையில் வாழ்ந்த பண்டைய குகை மனிதர்கள் சின்னஞ் சிறு கற்களைத் தம் கால்களால் மிதித்தபோது, அவை ஒன்றோடொன்று உரசி, தீப்பொறிகள் உண்டாவதைக் கண்டிருக்கக் கூடும். ஆனால், இரு கற்கள் ஒன்றோடொன்று உராய்ந்து அவ்வுராய்வினால்தான் தீப்பொறிகள் தோன்றுகின்றன என்பதை அவர்கள் உடனடியாகப் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். பல தலைமுறைகளுக்குப் பின்னர் அவர்களுக்கு நெருப்புப் பொறிகள் உண்டாவதற்கான காரணம் புரிந்திருக்கும் மற்றும் நடைமுறையில் செயல்முறைக்கும் வந்திருக்கும். ஆனால், முதன்முதலில் தீயானது தற்செயலாக அல்லது மின்னல் போன்று இயற்கையாக ஏற்பட்டது என்றே மனிதர் உணர்ந்தனர்.

மிக அதிக வெப்பநிலையில், பெரிய அடுப்புகளில் (ovens) நிலக்கரியை (coal) இட்டு, வறுத்து, கல்கரி அல்லது சுட்ட நிலக்கரி (coke) உருவாக்கப்படுகிறது. இந்த அடுப்புகளில் நிலக்கரி முழுமையாக எரிவதற்குத் தேவையான உயிர்வளி (oxygen) இல்லாததால், அது வறுக்கப்பட்டு (roasted), வாயுக்கள் நீக்கப்பட்டு, ஏறக்குறைய தூய்மையான கார்பன் அதாவது சுட்ட நிலக்கரி (coke) உண்டாகிறது.

தீக்குச்சிகளின் கண்டுபிடிப்பு:



பழங்கால மனிதன் தீயைக் கண்டுபிடித்தபோதே முதல் தீக்குச்சி வடிவமைக்கப்பட்டதாகக் கருதலாம்; இரு சிக்கிமுக்கிக் கற்களை உராயச் செய்து, தீப்பொறியை உண்டாக்கி அதன் வாயிலாக உலர் தழைகள் தீப்பிடித்தபோதே, தீப்பற்றச் செய்வதற்கான முதலாவது வழி முறை உருவாகி விட்டது.

படத்தில் காட்டியுள்ளவை போன்ற தற்காலத் தீக்குச்சிகள், குறைவான வெப்ப நிலையிலேயே தீப்பிடித்துக்கொள்ளும் பாஸ்ஃபரஸ் (phosphorus) கண்டறியப்பட்ட பின்னர் உருவானவை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாஸ்ஃபரஸைப் பயன்படுத்திப் பல்வகை வடிவிலான தீக்குச்சிகள் வடிவமைக்கப்பட்டன. சின்னஞ்சிறு மரத் துண்டுகளின் நுனியை வெள்ளை அல்லது மஞ்சள் பாஸ்ஃபரஸில் தோய்த்தெடுத்து தீக்குச்சிகள் உருவாக்கப்பட்டன. இருப்பினும், வெள்ளை அல்லது மஞ்சள் பாஸ்ஃபரஸ் மிக எளிதில் தீப்பிடித்துக் கொள்பவை மற்றும் பயன்படுத்த ஆபத்தானவை.

முதலாவது பாதுகாப்பான தீக்குச்சிப் பெட்டிகள் (safety matches) 1844ஆம் ஆண்டு ஸ்வீடனில், நச்சுத் தன்மையற்ற சிகப்புப் பாஸ்ஃபரஸைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டன. தீப்பிடித்து எரிவதற்குத் தேவையான எல்லா வேதிப்பொருட்களையும் தீக்குச்சியின் தலைப் பகுதியில் சேர்க்காமல், சிகப்புப் பாஸ்ஃபரஸை பக்கவாட்டுச் சுவர்ப் பகுதியில் பூசி, தீக்குச்சியை அதில் உராயச் செய்து தீயை உண்டாக்கும் வகையில் தீப்பெட்டி செய்யப்பட்டது.

கற்கால மனிதன், மரத்தாலான எளிய தீத் துரப்பணக் கருவியைப் (fire drill) பயன்படுத்தித் தீயை உண்டாக்கினான். இந்தக் கருவியை உலர்ந்த மரத் துண்டில் விரைந்து சுழற்றி போதுமான வெப்பத்தை அதில் ஏற்படுத்தித் தீயை உண்டாக்கினான்.

No comments:

Post a Comment