வெற்றி நிச்சயம்

சின்ன வயதில் பூதக்கண்ணாடி கொண்டு சூரிய வெளிச்சத்தை ஒளிக் கற்றையாக்கி உள்ளங்கையில் செலுத்தி சுரீரென்று சுட்டது ஞாபகம் இருக்கிறதா? ஆனால் மே மாத வெயிலில் மண்டை காயும் போது மிஞ்சிப்போனால் ‘பாழாய் போன வெயில்’ என்று அலுத்துக்கொள்கிறோம், அவ்வளவே.

ஒற்றை ஒளிக்கற்றை சுரீரென்று சுடுவதும் மொத்த வெயில் அந்தளவு சுடாமல் இருப்பதும் எதனால்? ‘ஃபோகஸ்’! ஒளிக்கற்றை லேசர் ஆகும் போது அபரிமிதமான சக்தி பெற்று வைரத்தை கூட அறுக்கிறது. கல்லிலேயே ஓட்டை போடுகிறது.



கம்பெனியை அது போல் ஃபோகஸ் செய்தால் போட்டியை ஒதுக்கி மார்க்கெட்டை கிழித்து வெற்றிகரமாய் நிலைநிறுத்த முடியும் என்கிறார் ‘ஆல் ரீஸ்’. ’ஃபோகஸ்’, அவர் கூறும் அறிவுறை மட்டுமல்ல. அவர் புத்தகத்தின் பெயரும். ஃபோகஸ்ட் கம்பெனிகளே மார்க்கெட்டில் வெற்றி பெறுகின்றன. நாய் வாய் வைப்பது போல் நாலாபுறமும் மேயும் அன்ஃபோகஸ்ட் கம்பெனிகள் நாலாவட்டத்தில் போட்டியுடன் மன்றாடி, முடியாமல் மார்க்கெட்டில் திண்டாடி, தடுக்கி விழுகின்றன.

ஃபோகஸ் இல்லாத நிறுவனங்கள்

பல்பில் துவங்கி டீவி, ரேடியோ, வாஷிங் மெஷின், அயர்ன் பாக்ஸ் என்று ஃபோகஸ் இல்லாமல் திண்டாடும் ‘ஃபிலிப்ஸ்’. நகலெடுத்து நன்றாய் இருந்தது போறாமல் கம்யூட்டர் செய்கிறேன் என்று ஃபோகஸ் இழந்து எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கும் ‘ஜெராக்ஸ்’. ஃபோட்டோ என்றால் ‘கொடாக்’ என்று பெயரை நாசமாக்கி மருந்து, வீட்டுப் பொருட்கள், டயக்நாஸ்டிக்ஸ் என்று அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகி திவாலாகியிருக்கும் ’கோடாக்’ என்று பல கம்பெனிகளை உலகமெங்கிலிருந்தும் உதாரணம் காட்டி உண்மையை உள்ளத்திற்கு உறைக்க வைக்கிறார் ரீஸ்.

304 பக்கங்கள். பதினைந்து அத்தியாயங்கள். திகட்டும் அளவிற்கு உதாரணங்கள். புரையேறும் அளவிற்கு ஆய்வுக்கட்டுரைகள். பக்கத்திற்கு பத்து முறையாவது போகஸ் என்ற வார்த்தை பிரயோகம். இத்தனை எழுதி என்ன பயன்? கேடு கெட்டு போகத் தானே சில கேன மனம் அலைகிறது. தப்பைத் தேடித் தானே தத்தி தத்தி ஓடுகிறது. வழுக்கி விழத் தானே சில வியாபாரிகள் மனம் விரும்புகிறது.

விலங்குகளுக்கு தெரிந்தது நமக்குத் தெரியவில்லை!

எந்த சிங்கமாவது இரு மான்களை ஒருசேர துரத்துவதை பார்த்திருக்கிறீர்களா? மான் கூட்டத்தை கவனித்து, ஒரு மானை குறிவைத்து அதை மட்டும் வேட்டையாடுகிறது. தன் குட்டிகளுக்கு பரிமாறுகிறது. பசியாறுகிறது. ஐந்தறிவு சிங்கத்திற்கு தெரிந்தது கூட நம்மில் பலருக்கு தெரியவில்லை. ஒரு தொழில், ஓரு மார்க்கெட், ஒரு கோர் காம்பெடன்ஸ் என்று ஃபோகஸ் செய்யாமல் திருப்பதி முடி திருத்துபவன் கணக்காய் ஒரே சமயத்தில் ஓராயிரம் தலையில் கத்தி வைக்கிறார்கள். கடைசியில் தங்களுக்கு தாங்களே மொட்டையடித்துக் கொள்கிறார்கள்!

ஆரம்பிக்கும் போது என்னவோ பல கம்பெனிகள் சமர்த்தாய் ஃபோகஸ் செய்து ஒரு பொருள், ஒரு மார்க்கெட் என்று லேசராய் தான் வெற்றி பெறுகின்றன. அதன் பின் தான் சனி பிடித்து, வெற்றி தலைக்கேறி, புதிய தொழில்களைத் தொடுவோம், தெரியாத மார்க்கெட்டில் நுழைவோம் என்று அன்ஃபோகஸ்டாய் மாறி, தலைகால் புரியாமல், தலை சுற்றி, கால் வழுக்கி, எங்கு விழுகிறோம், எதற்கு விழுகிறோம் என்று தெரியாமல் விழுந்து பல்லை உடைத்துக்கொள்கின்றன.

மீண்டும் மீண்டும் உருவாகும் ஒழுங்கற்ற நிலை

‘லா ஆப் என்ட்ராபி’ என்று ‘ருடால்ஃப் க்ளாசியஸ்’ கூறியதை மேற்கோள் காட்டுகிறார் ரீஸ். எண்ட்ராபி என்பதற்கு டிஸ்ஆர்டர், முறையின்மை, சீர்குலைவு என்று அர்த்தம். எந்த ஒரு மூடிய அமைப்பிலும் டிஸ்ஆர்டர் அதிகரிக்கும். ’குப்பையாய் கிடக்கிறது’ என்று திடீரென்று ஞானோதயம் வந்து வீட்டு பீரோவை சுத்தம் செய்து அதது இருக்க வேண்டிய இடத்தில் வைத்து நேர் செய்கிறோம். ஒரு மாதம் கழித்து பீரோ மீண்டும் குப்பையாய் மாறுகிறதல்லவா? இது தான் லா ஃஆப் எண்ட்ராபி. இதே கன்றாவி தான் கம்பெனிகளிலும் நடக்கிறது என்கிறார் ரீஸ்.

‘டாடா க்ரூப் பல துறைகளில் நுழைந்து பட்டையை கிளப்பவில்லையா’, ‘ரிலே ரேஸ் போல் ஓடி ரிலையன்ஸ் ரீங்கரிக்கவில்லையா’ என்று கேட்கலாம். இவை நுழைந்த காலம் வேறு. அப்பொழுது போட்டி இல்லை. கேள்வி கேட்க ஆளில்லை. மற்றவர் நுழையுமும் பல துறைகளில் கால் வைத்து காலூன்ற அவர்களுக்கு நேரம் இருந்தது, பணம் இருந்தது, பலம் இருந்தது. இன்று அப்படியா? ஒரு தொழிலில் ஃபோகஸ் செய்து முன்னேறவே மூச்சு முட்டுகிறது. கூட ஒன்றை சேர்த்தால் மூர்ச்சையாகி, மூழ்கி, முக்காடு போட்டுக்கொண்டு முனக வேண்டியது தான்.

டாடாவுக்கும் அடி சறுக்கும்!

ஆளானப்பட்ட டாடா கம்பெனி சிலதே சிரமப்படுகிறதே. ‘டாடா இண்டிகாம்’ திண்டாடுகிறது. உன் சங்காத்தமே வேண்டாம் என்று ‘டோகோமோ’ டாடாவிற்கு டாடா காட்டி சென்றுவிட்டது. கார்களை விற்க கஷ்டப்பட்டு ‘டாடா மோட்டார்ஸ்’ ரிவர்ஸில் சென்று கொண்டிருக்கிறது.

ஆறிப் போன ரிலையன்ஸ் காபி ஷாப்

ரிலையன்ஸ் மட்டும் என்ன வாழ்கிறதாம். ‘ரிலையன்ஸ் ஜாவாக்ரீன்’ காபி ஷாப் ஆறிப்போய் கிடக்கிறது. ‘ரிலையன்ஸ் லிவிங்’ பெயருகேற்றபடி வாழாமல் மூடப்பட்டு காரியம் செய்தாகிவிட்டது. ஃபோகஸ் இல்லாத டாடா, ரிலையன்ஸ் கம்பெனிகளே சரிகிறதென்றால் உங்கள் தொழில் எம்மாத்திரம்.

உத்தி அல்ல, செல்ல வேண்டிய பாதை

என்ன இருந்தாலும் ‘கோனார்’ தமிழ் உரை போல் சொன்னால் தான் நம்மவர்களுக்கு புரியும் என்று கடைசி அத்தியாயத்தில் பட்டியலிட்டு சில பாயிண்ட்டுகள் தருகிறார் ரீஸ். ஃபோகஸ்ஸை சிம்பிளாய் இருக்கட்டும். கடந்த காலத்தை கொண்டு கம்பெனி ஃபோகஸ்ஸை நிர்ணயிக்காமல் வருங்காலத்தை கணக்கில் கொண்டு வரையறுங்கள். அமைத்தவுடனே ஃபோகஸ் வெற்றி தராது. அதை நோக்கி உழைக்கவேண்டும். ஃபோகஸ் என்பது உத்தி அல்ல. கம்பெனி செல்லவேண்டிய பாதை மட்டுமே. காலப்போக்கில் பல காரணங்களுக்கு கம்பெனி ஃபோகஸ்ஸை மாற்றவேண்டி வரும். மாற்றத் தயாராய் இருங்கள். அதற்காக எப்படா மாற்றுவது என்று காத்திருக்காதீர்கள்.

வக்கனையாய் ‘பின் எப்படித் வளர்க்கிறதாம்?’ என்று குதர்க்கமாய் கேட்கும் பேர்களுக்கு ரீஸ் கூறும் பதில்: ‘ஃபோகஸ் செய்து அதிலேயே வளர எத்தனையோ வழிகள் இருக்கிறதே. எவ்வளவோ கம்பெனிகள் வளர்ந்திருக்கிறதே’. அதை பார்த்து புரிந்து கொள்ளுங்களேன்’.

வளர்ந்த கம்பெனிகள்

மைக்ரோ பிராசசரை மட்டுமே ஃபோகஸ் செய்து வளர்ந்த ‘இண்டெல்’. சிறிய கம்யூட்டர்களே கதி என்று மதியோடு முன்னேறிய ‘காம்பேக்’. ஓவர்னைட் டெலிவரி மட்டுமே செய்து ஓஹோ என்றிருக்கும் ‘ஃபெட்எக்ஸ்’. ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் மட்டுமே செய்து அமர்க்களமாய் இருக்கும் ‘மைக்ரோசாஃப்ட்’. ஜில்லென்று பானங்கள் மட்டுமே பரிமாறி சல்லென்று பறக்கும் ‘கோகோ கோலா’. இது போன்ற ஃபோகஸ்ட் கம்பெனிகளைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்.

ஃபோகஸ் புத்தகத்தை முடிந்தால் வாங்கி ஃபோகஸ் செய்து படியுங்கள். தொழிலை மூழு மூச்சுடன் ஃபோகஸ் செய்யுங்கள். முழுமையாய் வளர்வீர்கள். முழுவதுமாய் வெல்வீர்கள். ஃபீஸ் வாங்காமல் ரீஸ் தரும் அறிவுரைபடி நடந்தால் வெற்றியை லீஸ் எடுத்து குடியேறலாம். இல்லை பீஸ் பீஸாய் போகலாம்.

சஹாராவின் கதி!

இல்லை, இது ஒத்து வராது என்று ஒதுங்கி போனாலும் ஓகே. ஆனால் ஒன்று. சீராய் வளர்ந்து ஜோராய், எங்கு போய் நிற்கிறேன் பார் என்று மார் தட்டி ஃபைனான்ஸ் துறையில் துவங்கி ரியல் எஸ்டேட் சென்று அப்படியே விமான சர்வீஸ் ஆரம்பித்து அதுவும் போறாதென்று டிவி சேனல், ஹோட்டல், ஐடி என்று பல துறைகளில் கால் வைத்த ‘சஹாரா’ குழுமத் தலைவர் கடைசியில் போய் சேர்ந்த இடம்………ஜெயில்!

தேவையா உங்களுக்கு இந்த தலையெழுத்து!

No comments:

Post a Comment