இதற்கான விடை தீயிலேயே அடங்கி உள்ளது. தீ அல்லது நெருப்பு என்பது ஒரு வேதியியல் வினையாகும் (chemical reaction); இந்நிகழ்வு மிக விரைந்து நடைபெறுவதோடு வெப்பத்தையும் ஒளியையும் வெளிப்படுத்துகிறது. தீப்பிடித்தல் என்பது எரிபொருளுக்கும் (fuel) ஆக்சிஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு சாதாரண வேதியியல் வினை. வெப்பமும் ஒளியும் வெளிப்படும்போது, தீ உண்டாகிறது.
தீ உண்டாவதற்கு மூன்று பொருட்கள் தேவை. முதலாவது ஓர் எரிபொருள், அடுத்தது ஆக்சிஜன், மூன்றாவது வெப்பம். ஒரு காகிதத் தாள் அல்லது ஒரு மரத்துண்டு காற்றில் வைக்கப்படும்போது தீ உண்டாவதில்லை. எரிபொருள் போதுமான வெப்பத்தைப் பெறும்போது, அதனுடன் ஆக்சிஜன் சேர்ந்து, தீ கொழுந்து விட்டு எரிகிறது. ஒவ்வொரு எரிபொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையை (temperature) அடையும்போது, அது சுடர் விட்டு எரியத் துவங்குகிறது.
இக்குறிப்பிட்ட வெப்பநிலை, தூண்டு வெப்பநிலை (kindling temperature) அல்லது எரிநிலை (flash point) எனப்படுகிறது. ஏதேனும் ஒன்று தீப்பிடித்து எரியும்போது, அதனை விரைந்து அணைக்க வேண்டியது மிகவும் முக்கியம். குறிப்பாகக் கட்டடங்கள், வீடுகள் தீப்பிடித்து எரிகையில் உடனே தீயணைப்பை மேற்கொள்ள வேண்டும்.
தீயணைப்பு வீரர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடும்போது பாதுகாப்பு உடைகளை அணிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். இப்பாதுகாப்பு உடைகள் எளிதில் வெப்பத்தைக் கடத்தாமல் இருப்பவை; எனவே விரைந்து தீப்பிடித்துக் கொள்ளாதவை.
மெழுகு, இயற்கையாகவும் கலவை / சேர்க்கை (synthetic) முறையிலும் உருவாதல்:
பலவகைப் பழங்கள், தாவரங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றிலிருந்து மெழுகு (wax) பெறப்படுகிறது; விலங்குகளிலிருந்தும் இது உற்பத்தி செய்யப்படுகிறது; கனிமங்கள் மற்றும் பெட்ரோலியத்திலும் கூட மெழுகு உள்ளது. செயற்கையாக அல்லது மனிதரால் உருவாக்கப்படும் மெழுகுகளும் உள்ளன. எனவே மெழுகை நாம் பல்வேறு முறைகளில் பெறுகிறோம்.
பிரேசில் நாட்டிலுள்ள கார்னவ்பா என்னும் பனை மரத் (carnauba palm tree) தழையிலிருந்து கார்னப்வா மெழுகு உண்டாகிறது. பழுப்பு நிறத்திலுள்ள இம்மெழுகு தரையை அழகு படுத்தவும், மெழுகுவர்த்தி தயாரிக்கவும் பயன்படுகிறது. பெர்ரி என்னும் தாவரத்திலிருந்து உண்டாகும் பேபெர்ரி மெழுகிலிருந்தும் (bayberry wax) கூட மெழுகு வர்த்தி தயாரிக்கப்படுகிறது. தேனீக்கள் தம் தேன் கூட்டைக் (honeycombs) கட்டும்போது சுரக்கும் திரவமும் மெழுகாக விளங்குகிறது. ஒப்பனைப் பொருட்கள் (cosmetics), மெழுகுவர்த்திகள், பாலிஷ்கள், வண்ணத் தீட்டுகோல்கள் (crayons) மற்றும் செயற்கை மலர்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் இம்மெழுகு பயன்படுத்தப்படுகிறது. கம்பளி இழை கொண்ட விலங்குகளிலிருந்து (wool-bearing animals) பெறப்படும் கம்பளி இழை மெழுகு (wool wax) லெனோலின் (lanolin) எனப்படுகிறது; இதுவும் ஒப்பனைப் பொருட்கள் மற்றும் சோப்புகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது கிடைக்கும் மெழுகுகளில் 90% பெட்ரோலியம் மெழுகே ஆகும். இது மணமற்றது, சுவையற்றது, வேதியியல் வினை புரியாதது என்பதால், பல்வேறு பயன்பாடுகளுக்கும் இம்மெழுகு ஏற்றதாக விளங்குகிறது.
No comments:
Post a Comment